இந்தக் கப்பலில் கேப்டன் உள்பட யாருமே கிடையாது! – உலகின் முதல் தானியங்கி கப்பல்

மனிதர்கள் பல காலமாக கடல்வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். தொலைவில் இருக்கும் இடங்களுக்குப் பயணம் செய்வதற்கும் வணிகர்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்தே முதலில் பயன்பட்டது. தற்பொழுது கடலில் பயணம் செய்பவர்கள் குறைவுதான் என்றாலும் சரக்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் கடல்வழிப் போக்குவரத்தே அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அளவில் பெரிய பொருள்களை மற்ற போக்குவரத்தின் மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது கடல் வழிப் போக்குவரத்தே பொருத்தமானதாக இருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்தில் செலவும் மிகக்குறைவு. ஆகவேதான் உலக அளவில் சரக்குப் போக்குவரத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது .

கடல்வழிப் போக்குவரத்தில் பயன்படுவது சரக்கு கப்பல்கள்தாம். தொடக்கத்தில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பாய்மரத்தால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கப்பல்கள், அதன் பிறகு நிலக்கரி, டீசல் இன்ஜினால் இயங்கும் வகையில் மாற்றம் பெற்றன. தொழில்நுட்ப அளவில் அணு சக்தியில் இயங்கும் வகையில் கூட கப்பல்கள் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தில் இவ்வளவு வளர்ச்சியடைந்து விட்ட போதிலும் கூடக் கப்பல்களில் பல காலமாக மாறாத ஒரே விஷயம் மனிதர்கள்தாம். எவ்வளவுதான் கப்பல்கள் நவீனமடைந்து விட்டாலும் கப்பல்களை இயக்குவதற்கு மனிதர்களின் உதவி அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்பொழுது அந்த நிலை மாறப்போகிறது. கூடிய விரைவிலேயே மனிதர்களின் உதவியின்றி இயங்கக்கூடிய கப்பலை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது நார்வேயைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

நார்வேயைச் சேர்ந்த யாரா (Yara) என்ற நிறுவனம் இந்தக் கப்பலை தயாரிக்கவுள்ளது. இரசாயன பொருள்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம் தானியங்கிக் கப்பலை கட்டமைப்பதற்கு $25 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிடவுள்ளது. யாரா பெர்க்லேன்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள ( Yara Birkeland) இந்தக் கப்பலின் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கை நார்வே அரசு கடந்த 2017-ம் ஆண்டிலேயே வழங்கிவிட்டது. சரக்கு கொண்டுசெல்லப்படும் வகையில் உருவாக்கப்படும் இந்தக் கப்பல் 260 அடி நீளம் கொண்டது. இந்தக் கப்பலின் சிறப்பு தானியங்கி என்பது மட்டுமல்ல இது முழுக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி மட்டுமே இயங்கும் என்பதும்தான். இந்தக் கப்பலை இயக்குவதற்கு மின்சார மோட்டர்கள் பயன்படுத்தப்படும் அதற்குச் சக்தி அளிப்பதற்காக பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கப்பல் சராசரியாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதிகபட்சமாக 19 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. வசதிகள் எல்லாமே அருமை; ஆனால், கடலில் மனிதர்கள் இல்லாமல் எப்படி இந்தக் கப்பல் இயங்க முடியும்? அதை யார் வழி நடத்துவார்கள் என்ற குழப்பம் பலருக்கு எழக்கூடும். அதற்காக காங்ஸ்பெர்க் ( Kongsberg) என்ற மற்றொரு நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது இந்தக் கப்பல் நிறுவனம் .

இந்த நிறுவனம் கடல் வழி போக்குவரத்தில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டது . இந்த நிறுவனத்தின் வழிகாட்டும் அமைப்புகள் தானியங்கி கப்பலுக்கு வழிகாட்டும். அது தவிர இந்தக் கப்பலில் பல வழிகாட்டும் கருவிகள் இருக்கின்றன. 2019-ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் இந்தக் கப்பலில் தற்காலிகமாக மனிதர்கள் இருப்பார்கள். கப்பல் எப்படிச் செயல்படுகிறது, அதில் இருக்கும் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டறிவதற்கு மட்டுமே அவர்கள் இருப்பார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 2020-ம் ஆண்டில் மனிதர் உதவியின்றி முழுவதும் தானியங்கி முறையில் செயல்படத்துவங்கும். இந்தத் தொழில்நுட்பம் கடல்வழிப் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் இந்தத் தானியங்கி கப்பல் மூலமாகச் சரக்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளது யாரா.

LEAVE A REPLY