இடைக்கால அறிக்கை வந்தபின்னரே மகாநாயக்கதேரர்களுடன் சந்திப்பு – சுமந்திரன்!

பௌத்த பீடாதிபதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகச் சந்திக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு, பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவரும் முன்னர், மகா சங்கத்தினரைச் சந்திப்பதில் அர்த்தமில்லை.

எனவே, இடைக்கால அறிக்கை வெளிவந்ததும், அதிலுள்ள சரத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மகாநாயக்கர்களைச் சந்திக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.“ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY