ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி இல்லை தேர்தல் ஆணையத்திற்கு தான் மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசின் மீதான விமர்சனத்திற்கு இடையே களமிறங்கிய திமுக வெற்றியை தனதாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகதரப்பில் இருந்தது. இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார். கடந்த ஆண்டு தேர்தலில் 57673 வாக்குகளை பெற்ற திமுக, இந்த தேர்தலில் 24581 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்து உள்ளது. கடந்த தேர்தலைவிட 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்து உள்ளது.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி அடைந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி இல்லை.தேர்தல் ஆணையத்திற்கு தான். வாக்காளர்களுக்கு பணம் வாரி வழங்கப்பட்டதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. சுதந்திரமாக தேர்தலை நடத்திட ஆணையமும், காவல்துறையும் துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. இதற்கு முன் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் இப்படி ஒரு கரும்புள்ளியை ஆணையம் பெற்றதில்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY