ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம்: சுமந்திரன்!

ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த அதிர்சசி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதை அனுமதிக்கவும் போவதில்லை. அதை நான் யாழ்ப்பாணத்திலும் கூறுவேன். வேறு எங்கும் கூறுவேன். இதை கூறுவதால் எனக்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது.

அவர் எங்களிற்காக போராடியவர். அவரை ஏன் ஏற்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். அவர் ஆயுதம் ஏந்தியதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

என்னுடைய 5 வயதில் இருந்து கொழும்பிலேயே வாழ்கிறேன். எனக்கு கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிங்கள மக்களுடன் வாழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறுகிறேன்.

இலங்கை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியில் நானும் சம்பந்தனும் மாத்திரமே தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என நினைக்கிறேன்.

தெற்கில் இதை கூறிவிட்டு, வடக்கில் நான் வேறுவிதமாக பேசுவதில்லை. இதையேதான் அங்கும் பேசுகிறேன். இதனால்தான் ஒரு பகுதியினர் எனக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

இம்முறை தேர்தலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்கை பெற்று வெற்றியடைவேன் என்றார்.