ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது: தலீபான் தளபதி உள்ளிட்ட 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஆட்சியில் இருந்து அமெரிக்கா அப்புறப்படுத்தி 16 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அவர்கள் அட்டூழியம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர்களை ஒடுக்க முடியாமல், அமெரிக்க கூட்டுப்படையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு குணார் மாகாணத்தில் நராய் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு தலீபான் இயக்க பயங்கரவாதிகள் கூடி இருந்து, சக்திவாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, ஒரு சக்திவாய்ந்த வெடிகுண்டு, எதிர்பாராத வகையில் முன்கூட்டியே வெடித்து சிதறியது. இதில் தலீபான் இயக்கத்தின் தளபதி ஒருவர் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இந்த குண்டுவெடிப்பை அந்த மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் பாரித் தேக்கான் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “பட்டாஸ் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தலீபான் இயக்க பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அது வெடித்து ஜஹான் என்ற தளபதியும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது” என்றார்.

அதே நேரத்தில் இது தொடர்பாக தலீபான்கள் வசமிருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY