ஆப்கானிஸ்தானில் உலமாக்கள் அமைதி குழு கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டு சண்டை எவ்வித சட்டபூர்வமான காரணமும் அற்றது. இந்த தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் மக்கள்தான் பலியாகி வருகின்றனர். மதம்சார்ந்த, தேசிய முக்கியத்துவமற்ற, மனிதநேயமற்ற இதுபோன்ற தாக்குதல்கள் இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிரான பாவச்செயலாகும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (மதத் தலைவர்கள்) பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த ஒருவன் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.

இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY