ஆபத்தான பாதையில் கால் பதிக்கும் அரசு : கே. சஞ்சயன்

தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐ. நாவுடன் இப்போது பகிரங்கமாக முரண்படத் தொடங்கியிருக்கிறது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, அடிப்படை நாகரிகம் தெரியாதவர், திறமையற்றவர், இராஜதந்திர நெறிமுறைகளை அறியாதவர் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பகிரங்கமாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கும் இடையிலான சந்திப்பின்போது கூட, காரசாரமான வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இதற்குப் பின்னர்தான், அவரை “ஓர் இராஜதந்திரி போல நடக்கத் தெரியாதவர், இராணுவ அதிகாரி போன்ற தோரணையில் நடந்து கொண்டார்” என்று விஜேதாச ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

அது மாத்திரமன்றி, “புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக, ஐ.நாவின் வழிகாட்டு முறைகளுக்கு அமைய, செயற்பட இலங்கை அரசாங்கம் தயாரில்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுடன் மாத்திரமன்றி, கடந்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோவையும் விஜேதாச ராஜபக்ஷ, மோசமாக விமர்சித்திருக்கிறார்.

மோனிகா பின்டோ, இப்போது ஐ.நா சிறப்பு அறிக்கையாளராக இல்லை. அவர் பதவி விலகி விட்டார். அவர், இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகத் தயாரித்த அறிக்கை, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதில், இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பாகக் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதுவும் அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது,
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் மோனிகா பின்டோவும் பின் எமர்சனும் தகுதியற்றவர்கள் என்று பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறார் விஜேதாச ராஜபக்ஷ.

விஜேதாச ராஜபக்ஷவினது இந்த விமர்சனங்களுக்குக் காரணம், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்ற கருத்தை அவர்கள் வெளியிடாததுதான். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் நிலைமைகளில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது, மோசமான, கட்டமைக்கப்பட்ட சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. உலகில் வேறேங்கும் இல்லாதளவுக்கு இலங்கையில் கைதிகள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றெல்லாம், அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

“போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசாங்கம் விரைவாகச் செயற்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதான் இலங்கை அரசாங்கத்துக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு, ஜனவரி எட்டாம் திகதி, பதவியில் இருந்து இறக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களையும் அவர்களின் அறிக்கைகள் கருத்துகளையும் எவ்வாறு அணுகியதோ, அதற்கு எவ்வாறான பிரதிபலிப்பை வெளியிட்டதோ, அதேபோன்ற தோரணையைத்தான் இப்போதும் காண முடிகிறது.

ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் தீவிரமான கண்காணிப்பிலும் நெருக்கடிகள் சூழ்ந்திருந்த நிலையிலும்தான், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. சர்வதேச அழுத்தங்களைக் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களைக் குறைக்கின்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு இருந்தது,
அதனால், சர்வதேச சமூகத்திடம் பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்திருந்தது. அவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்தான், இப்போது அரசாங்கத்துக்கு மெல்லமெல்ல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

போர் முடிவுக்கு வந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியல் தீர்வு, அதிகாரப்பகர்வு என்று சர்வதேச சமூகத்திடம் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது.

ஆனால், எதையும் நிறைவேற்றாதபோது தான், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபோன்றே, தற்போதைய அரசாங்கமும் பதவிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

ஆனால், அந்த வாக்குறுதிகளை உரிய வகையிலோ உரிய காலத்துக்குள்ளாகவோ நிறைவேற்றத் தவறியிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது என்பது சர்வதேச சமூகத்துக்கு கொஞ்சமேனும் புரியத் தொடங்கியிருக்கிறது என்பதைத்தான், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் கருத்துகள் எடுத்துக் காட்டுகின்றன.

தனது பயணத்தின் முடிவில் பென் எமர்சன் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதுதான். ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், “இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து, இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்குக் கூட கொண்டு செல்லப்படலாம்” என்று கூறியிருந்தார்.

‘இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லப்படும்’ என்று எச்சரிக்கும் தொனியில் அவர் கருத்தை வெளியிடாத போதும், அதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையே சுட்டிக்காட்டியிருந்தார்.

பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரம் செல்வதற்கு, தற்போதுள்ள பூகோள அரசியல் சூழலும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் இடமளிக்காது. ஆனால், காலமாற்றத்தில் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.

ஆனால், சர்வதேச சமூகத்துக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். பென் எமர்சனின் கருத்தே அதற்கு ஓர் உதாரணம்.

கொழும்பிலேயே இவர் இந்தளவுக்கு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் என்றால், அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை எந்தளவுக்குப் பாரதூரமானதாக இருக்கும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது முக்கியமான பிரச்சினை.

மோனிகா பின்டோ கூட, கொழும்பில் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கவில்லை. ஆனால், ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது அறிக்கை, மிகக் கடுமையானதாக இருந்தது.

அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது, பென் எமர்சனின் அறிக்கை இலங்கைக்கு பெரியதொரு சவாலாகவே இருக்கும். அதுவும், இந்த அறிக்கை வரும்போது, இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் வாக்குறுதி கொடுத்து ஓராண்டு ஆகியிருக்கும்.

ஜெனிவா வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசாங்கம் இற்றைவரை, எந்த நகர்வையும் எடுக்காத நிலையில்தான் இருக்கிறது. எஞ்சிய காலத்திலும்கூட, இந்த அரசாங்கம் சர்வதேசத்திடம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை யாரிடமும் இல்லை.

“ஐ.நா அறிக்கையாளர்கள் இராஜதந்திரம் தெரியாதவர்கள், நாகரீகமற்றவர்கள், இராணுவ அதிகாரி போன்ற தொனியில் பேசுகிறார்கள்” என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அவ்வாறு அவர்கள் நடப்பதற்குக் காரணம், இலங்கை அரசாங்கம் ஐ.நாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “சர்வதேசத்தின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என்று அவர் கூறியிருந்தார்.

ஐ.நா அறிக்கையாளர்கள், உலகின் பல நாடுகளின் பல்வேறு சூழல்களைச் சென்று பார்வையிட்டு, அறிக்கை தயாரிப்பவர்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். ஆறு ஆண்டுகள் ஐ.நா அறிக்கையாளராக இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில்தான், பென் எமர்சன், உலகில் வேறெங்கும் நடக்காத மோசமான சித்திரவதைகள் இலங்கையில் நடப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அரசாங்கமோ, ஐ.நா அறிக்கையாளர்களை அனுபவமற்றவர்களாக, இங்கிதம் தெரியாதவர்களாக அடையாளப்படுத்த முனைகிறது. மோனிகா பின்டோ விவகாரத்திலும் கூட விஜேதாச ராஜபக்ஷ, “10 நாட்கள் இங்கு வந்து தங்கியிருந்துவிட்டுச் செல்பவர்களால், இங்குள்ள நிலைமையை எவ்வாறு கணிப்பிட முடியும்” என்று கூறியிருந்தார்.

ஐ.நா அறிக்கையாளர்கள், நாட்கணக்கில் பயணங்களை மேற்கொண்டுதான் கள ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். இது, தற்போதைய அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரிந்த விடயம்தான். இந்த வழக்கம்தான் உலகெங்கும் இருக்கிறது. இலங்கையிலும் இதுவரையில் இருந்தது.

இப்போதுதான் திடீரென புதியதொரு நடைமுறை வந்ததுபோல, விஜேதாச ராஜபக்ஷ பிதற்றுகிறார்.

சில நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள் என்பதைத் தெரிந்து கொண்டுதான், இலங்கைக்கு ஐ.நா அறிக்கையாளர்களை அழைப்பதற்கு ஜெனிவாவில் அரசாங்கம் வாக்குறுதிகளை அளித்தது. இதே அரசாங்கம்தான் அவர்களை, “வாருங்கள்” என்றும் அழைப்பு விடுத்தது.

அவர்கள் வந்து அறிக்கைகளைத் தமக்குச் சார்பாகக் கொடுக்கவில்லை என்றதும், ஐ.நா அறிக்கையாளர்களை அரசாங்கம் விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை அம்மையாரை இப்படித்தான், வம்புக்கு இழுத்து, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிக் கட்டும்நிலை ஏற்பட்டது. இதைத் தற்போதைய அரசாங்கம் மறந்து விட்டதா என்று தெரியவில்லை.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக பென் எமர்சனின் விமர்சனங்களையோ கருத்துகளையோ ஏற்பதற்கு விஜேதாச ராஜபக்ஷ தயாராகவே இல்லை. “ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, செயற்பட முடியாது. எமது நாடாளுமன்றம்தான் அதைத் தீர்மானிக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆக, ஐ.நாவின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் புறக்கணித்துச் செயற்படத் தயார் என்ற கட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் வரத்தொடங்கி விட்டது.

இது இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளப் போகும் பேராபத்து ஒன்றுக்கான அறிகுறிதான்.
ஐ.நாவையும் சர்வதேச சமூகத்தையும் தம்முடன் ஒத்து ஊத வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு அரசாங்கத்தை நெருக்கடியான நிலை ஒன்றுக்குள் கொண்டு செல்லக்கூடும்.

LEAVE A REPLY