ஆபத்தான நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்! மகிந்த முன்னிலையில் எடுத்துக்காட்டிய டக்ளஸ்

யுத்தம் நடைபெற்ற போது எம்மை கைவிட்டுச் சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று கோரிய போதிலும் அதனைக் கவனத்தில் கொள்ளாத அதே நாடுகள், தமிழ் மக்களுக்கு தீர்வுகளை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் ஊடக ஆசிரியர்களுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது பேசிய அவர்,

“யுத்தம் நடைபெற்ற போது எம்மை கைவிட்டுச் சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று கோரிய போதிலும் அதனைக் கவனத்தில் கொள்ளாத சர்வதேசம், மக்களுக்கு தீர்வுகளை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தில் தீர்வு இருப்பதாக போலித் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சுயநலவாதிகளாவர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாமே நடைமுறைச் சாத்தியமான வழியில் முயற்சிக்க வேண்டும்.

இன ஐக்கியம், தேசிய நல்லிணக்த்தின் ஊடாகவே தேசிய அரசியல் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வேண்டும்.

அவ்வாறில்லாமல் சர்வதேச சமூகத்திடம் தீர்வு இருப்பதாகவும் கூறி தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறான பாதையில் இழுத்துச் சென்று மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுவதற்கும் – இருக்கின்ற பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்குமே சுயநல அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர்” என்றார்.