ஆட்சி மாறினாலும் காணி விடுவிப்பாம்: சொல்கிறார் கூரே

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை தானும் விட்டுவிட முப்படைகளும் மறுத்துவருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநரோ அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் பரப்புரைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

அவ்வகையில் அரசியல் மாற்றங்களை கருத்தில் கொள்ளாது பொதுமக்களின் காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆளுநர் றெஜினோல்ட் குரேயிடம் பரிந்துரைத்துள்ளதாக இன்று புதிய குண்டொன்றை போட்டுள்ளார்.

அதற்கு அமைவாக வடமாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை விடுதலை செய்வது தொடர்பான ஆராயும் விசேட கூட்டங்கள் மன்னார் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா உள்ளிட்ட மாகாணங்களில் தன்னால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் பொதுமக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்காக மாவட்டம்தோறும் அரசாங்க அதிபர் பணிமனையில் ஆளுநர் அவர்கள் தொடர்ச்சியாக கூட்டங்களை நடாத்தி மக்களுக்கு சொந்தமான காணிகளில் வழங்க கூடியதனை உடனடியாக வழங்குவதற்கான பணிப்புரைகளை பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கி வருகின்றார்.

மீண்டும் ஒரு முறை அனைத்து அரசாங்க அதிபர் பணிமனைகளிலும் கூட்டங்களை நடாத்த இருப்பதாகவும் அதன்போது பாதுகாப்பு படையினர் பயன்பாட்டில் உள்ள தனியார் காணி தொடர்பான அறிக்கை வரைபடம் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களையும் அதிகாரிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் முப்படைகளும் இனிமேல் ஒரு அங்குல காணிதனையும் விடுவிக்க போவதில்லையென்ற அறிவிப்பினையடுத்து முல்லைதீவில் ஆளுநரால் நடத்தப்பட்ட கூட்டம் இடையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.