ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றுவதற்கு ஜப்பான் உதவும்

சிறிலங்காவை ஆசியாவின் பொருளாதாரக் கேந்திரமாக மாற்றுவதற்கு ஜப்பான் உதவும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்தும், நம்பிக்கையுடனேயே தாம் சிறிலங்காவுக்கான பயணம்ரைத மேற்கொண்டிருப்பதாக இந்தச் சந்திப்பின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிருத்தி, கண்டி நகர விரிவாக்கம், கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கம், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியனவற்றில் ஜப்பானின் முதலீடுகளின் முக்கியத்துவமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மிதக்கும் திரவ எரிவாயு மின் நிலையத் திட்டம் தொடர்பாக இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் ஜப்பானுடன் உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக, 500 மெகாவாட் மிதக்கும் திரவ எரிவாயு மின்திட்டத்தையும், எரிவாயு விநியோக குழாய் அமைப்பையும் நிறுவ ஜப்பான் இணங்கியுள்ளது.

அத்துடன், ஜப்பானும் சிறிலங்காவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்பட முடியும் என்றும், எதிர்காலத்தில் சிறிலங்காவுடன் இன்னும் அதிகமாக நெருக்கத்துடன் பணியாற்ற முடியும் என்று நம்புவதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY