அவர் மறைந்த தினம் இன்று.

நவ., 21, 1991

கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூரில், மே, 5, 1903ல் பிறந்தவர் சுப்ரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார். சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில், 1923-ல் பட்டம் பெற்றார்; சென்னை சட்டக் கல்லுாரியில், 1925-ல் பட்டம் பெற்றார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதி வரை துறவியாக வாழ்ந்தார்.

கடந்த, 1930-ல், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின் அது, பெ.நா.பாளையத்திற்கு மாறியது.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, நான்கு முறை சிறை சென்றார். காங்கிரஸ் கட்சியின், கோவை மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த, 1946-ல் சென்னை சட்ட மேலவை உறுப்பினரானார். கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். கடந்த, 1957-ல் பெண் கல்விக்காக கல்லுாரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது, அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்து உள்ளது.

கடந்த, 1952-ல் திருப்பூர் லோக்சபா தொகுதி உறுப்பினரானார். 1958 முதல், 1964 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பத்மபூஷண், ஜி.டி.பிர்லா ஆகிய விருதுகளைப் பெற்றார்.கல்வியாளர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-, நவம்பர், 21ல், தன், 88-வது வயதில் காலமானார்.அவர் மறைந்த தினம் இன்று.