அவசரகால சட்டத்தை நீடிக்க கூட்டமைப்பு எதிர்ப்பு

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒருமாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞாசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றால் ஏன் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்றும் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம் 3 ஆண்டுகளை தாண்டியுள்ள நிலையில் இதற்கான நீதியை வழங்குவதற்கும் இந்த அரசாங்கம் முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.