“அழைப்பு விடுவதற்கு முன் ஐ.தே.க.விற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும்” – சஜித்திற்கு சுதந்திர கட்சி பதிலடி!

பிற கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை சஜித் பிரேமதாச தீர்க்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுதந்திரக் கட்சிக்குள் எவரும் அரசியல் ரீதியாக சிக்கித் தவிக்கவில்லை என்றும் கட்சி ஒன்றுபட்டுள்ளது மற்றும் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் எம்மால் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்ற கட்சிகளின் பிரச்சினைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தனது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களையும், தனது பிரிவில் இருந்து விலகிய உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு பதிலளித்த அவர், குமார வெல்கம சுதந்திர கட்சியின் பிரதிநிதி இல்லை என கூறினார்.

எனவே குமார வெல்கமவால் சுயாதீனமான கருத்துக்களை வெளியிட முடியும் என்றும், எனவே அவரின் நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்றும் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.