அரச வைபங்களை ஹோட்டல்களில் நடத்த முற்றாகத் தடை – ஜனாதிபதி உத்தரவு!

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் இன்று (வியாழக்கிழமை) சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, குறிப்பாக சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசின் கீழ் இயங்கும் பல கேட்போர் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் சொகுசு ஹோட்டல்களில் நடாத்துவதன் ஊடாக ஏற்படும் வீண் விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.