அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராகும் எதிர்கட்சியை சேர்ந்த சிறுபான்மை எம்.பிக்கள்

அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் அந்தச் செய்தியில்,

எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுபான்மை கட்சியொன்றை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையிலும் முக்கிய எதிர்கட்சியிடமிருந்து தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறுவதில் சிறுபான்மை கட்சிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளதை முக்கிய அரசியல்வாதியொருவர் உறுதிசெய்துள்ளார்.

இதேவேளை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் உள்ள நிலையில் அரசாங்கம் ஏன் சிறுபான்மை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுகின்றது என்ற கேள்விக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உள்ளனர் என மேலும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.