அரசியல்வாதியின் தலைமையில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்: சாட்சியங்கள் உண்டு! – மோகன் அதிர்ச்சி தகவல்

காத்தான்குடியில் உள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல்போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதென கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தாம் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் காணாமல்போனோர் 35 பேர் அளவில் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவம் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் நடைபெற்றுள்ளது.

குறிப்பிடப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் அந்தச் செய்தி குறித்து தெரியப்படுத்தி இலங்கை இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்தவதற்கான அறிக்கை ஒன்றினையும் வழங்கியுள்ளளோம்.

குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக அவரிடம் கூறியிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தகவலை வழங்கியிருக்கின்றோம்.

சம்மந்தப்பட்ட இடங்களை அகழ்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போன பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் காணாமல்போயிருக்கின்றனர்.

எனவே எங்களது சாட்சியத்தைக்கொண்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

சாட்சியங்களின் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்கள் சாட்சியங்களின் விபரங்கள் குறித்து தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவ்விடயம் மூடிமறைக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.