அரசியல்வாதிகள் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக சஜித் குற்றச்சாட்டு

பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, கடந்த காலங்களில் தூய்மையான தேசவிரோத செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

கொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் அரச சொத்துக்கள் எவ்வாறு பங்கிடப்பட்டது என எம் அனைவருக்கும் தெரியும்.

இந்த சொத்துக்கள் பொது மக்களுக்கன்றி, அரசியல்வாதிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. வீட்டுத்திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகவன்றி, அமைச்சர்களின் உறவுகளுக்கே வழங்கப்பட்டன.

இவ்வாறானதொரு கலாசாரமே கடந்த காலங்களில் நாட்டில் நீடித்திருந்தது. இவ்வாறான செயற்பாடுகளானது தூய்மையான தேச விரோதம் என்றே நான் கருதுகிறேன்.

மக்களின் நிதிதான் இதற்காக பயன்படுகிறது. எனவே, இதன் பயன் மக்களுக்குத்தான் சென்றடையவேண்டுமே ஒழிய ஏனைய தரப்பினருக்கு அல்ல“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.