அரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான திட்டமுன்மொழிவுகள் கோரப்பட்டபோது அதனை முதன் முதலாக உரிய நேரத்திற்குள் சமர்ப்பித்தவன் நான்.

அதற்கமைய Gam/BattiD/05 எனும் இலக்கம் இடப்பட்ட 20.10.2018 திகதியிடப்பட்ட தங்களால் சமர்ப்பித்த திட்டங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்ட கடிதம் எனக்கும், மாவட்ட செயலகத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தன. எனினும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் சில வேலைத்திட்டங்கள் தடைப்பட்டிருந்தன. இதனை நான் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தேன்.

மீண்டும் கம்பெரலிய வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனும் அறிவிப்பின் பின்னர், என்னால் முன்மொழியப்பட்ட கம்பரெலிய வேலைத்திட்டங்களுக்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதை அறியாத மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்பு மக்களை ஏமாற்றும் தமது வழமையான பாணியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது வங்குறோத்து அரசியலை வெளிப்படுத்தி வருகின்றார்.

எனது மக்களுக்காக நான் முன்மொழிந்த கம்பரெலிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் தேவைப்படின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

நான் வெளிநாட்டுக்கு சென்றமையால் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது.

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற நோக்கில் தவறான செய்திகளை பரப்பி வரும் அரசியல்வாதிகள், இவ்வாறான தவறான செய்திகளை பரப்புவதை இவ் மறுப்பறிக்கையுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

முடிந்தால் இவ்விடயம் தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ளவும்.

அதுமாத்திரமல்லாது கடந்த 2018 ஆம் ஆண்டு அதிகளவு நிதியொதுக்கீடுகளை பல அமைச்சுக்களுடன் கலந்துரையாடி மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

கம்பரெலிய வேலைத்திட்டம் தவிர்த்து 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் 2018 இல் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான தகவல்கள் தேவைப்படின் மாவட்ட செயலகத்துடனோ அல்லது நேரடியாக என்னுடன் பேசினால் சகல ஆவணங்களையும் தர நான் தயாராக உள்ளேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.