அரசியலமைப்பு என்பது கல்லில் செதுக்கியதல்ல!

பண்டா _-செல்வா, ட்லி-_செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க தவறி விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தத்தை குட்டிச் சாத்தானாக சித்தரிக்காது 21ஆம் நூற்றாண்டில் சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த அழகிய குழந்தையொன்றை பிரசவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை நேற்றுமுன்தினம் பிரதமரினல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமரின் உரையைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது;

நவீன தொழில்நுட்ப உலகிலே புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய்கிறோம். தற்காலத்திற்கு ஏற்றவாறு யாப்பு திருத்தப்பட வேண்டும். 1978 யாப்பிற்கு சு.க எதிர்ப்புத் தெரிவித்தது. அன்று முதல் 1978 யாப்பு திருத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை சு.க.கொண்டிருந்தது. 1999 ஐ.தே.க மாநாட்டில் அரசியலமைப்பை திருத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1948 முதல் 1970 வரையான காலத்தில் யாப்பை திருத்த எந்த அரசிற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 1972 யாப்பு குறித்து பாரிய விமர்சனம் எழுந்தது. சோல்பரி யாப்பு முதல் நாட்டில் சிங்கள-_முஸ்லிம் கலவரம், சிங்கள_-தமிழ் கலவரம் என பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. சோல்பரி யாப்பில் நல்லிணக்கம் தொடர்பில் பல குறைபாடுகள் காணப்பட்டன. புலி பயங்கரவாதம் ஏற்பட்டு பிரபாகரன் எனும் பயங்கரவாதி உருவாகினார்.

டல்லி_-செல்வா மற்றும் பண்டா_-செல்வா உடன்படிக்கைகளை செயற்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார். 1983 கறுப்பு ஜுலையின் பின்னர் இந்திய_-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு எதிராக நானும் ஸ்ரீமாவோவுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டேன்.

சோல்பரி முதல் இன்று வரையான யாப்புகளை நோக்கினால் நல்லிணக்கம், இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் யாப்பு திருத்தங்கள் செய்யப்படவில்லை. ஓரு கட்சியையோ ஒரு இனத்தையோ தனியாக கவனிக்கும் நிலை வேறு நாட்டில் கிடையாது. அரசியலமைப்பு என்பது கல்லில் செதுக்கியது போன்று இருக்கக் கூடாது. காலத்திற்கு ஏற்றவாறு மாற்றக் கூடியதாக அது இருக்க வேண்டும்.

19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த சகல எம்பிக்களையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். புத்தகத்தில் எவ்வாறு இருந்தாலும் அமுல்படுத்தும் நபரின் குணாதிசயங்களின்படியே அது செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக நிறைவேற்று அதிகாரம் இருப்பது தவறில்லை என்கின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறை இருந்ததாலே யுத்தத்துக்கு முடிவு காண முடிந்தது என்ற கருத்து காணப்படுகிறது.

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். வடக்கு தெற்கு மக்களிடையே காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

தெற்கு மக்கள் சமஷ்டி என்ற சொல்லுக்கும், வடக்கு மக்கள் ஐக்கியம் என்ற சொல்லுக்கும் பயப்படுகின்றனர். இனவாத குழுக்களின் செயற்பாட்டினால் நாட்டில் இரத்தம் சிந்த நேரிட்டது.

மகாசங்கத்தினர் புதிய யாப்பு குறித்து என்னிடம் வினவினர். பௌத்த மதத்திற்குள்ள முன்னுரிமை நீக்கப்படுமா என கேட்டனர். யாப்பு குட்டிச்சாத்தானாக காண்பிக்கப்படக் கூடாது. 21ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கான குழந்தையொன்றை உருவாக்க வேண்டும்.

1970ல் மூன்றில் இரண்டு பலத்தைப் பயன்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யாப்பை ஏற்படுத்தியிருக்கலாம். 1977 இலும் அதனை செய்திருக்க முடியும். 2009 இல் யுத்தம் நிறைவடைந்து அமைதி நிலை நாட்டப்பட்டபோது மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டிருக்கலாம். 2010ல் மூன்றில் இரண்டு அதிகாரம் 18ஆவது திருத்தத்திற்கே பயன்படுத்தப்பட்டது.

யுத்தத்திற்கான காரணத்தை அறிந்து மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்கத் தேவையான நடவடிக்கையை அன்று எடுத்திருக்கலாம். 2004 சுனாமியின் போது கண்ணீருடன் முழு நாடும் இணைந்த போது அதனைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஏன் எமக்கு நாட்டிற்காக ஒன்றுபட்டு செயற்பட முடியாது? வடக்கு மற்றும் தெற்கு இனவாதத்தை ஓரங்கட்டி மக்களின் கருத்தை அறிந்து அதன்படி செயற்பட வேண்டும்.

வெளிநாட்டு ஆலோசனைக்கு அமைய யாப்பை திருத்தப் போவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எமக்கு எந்த நாட்டினதும் அழுத்தம் கிடையாது. சகலரும் இணைந்து தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். நாட்டில் குழப்ப நிலை ஏற்படுத்தும் வகையில் பொய்ப் பிரசாரம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். யாப்பு திருத்தங்களுக்குத் தயாரான ஒவ்வொரு காலத்திலும் இந்த நிலை ஏற்பட்டது. இனவாதிகளே இதனைச் செய்கின்றனர். நாட்டில் சகலரும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு பங்களிக்க வேண்டும்.

LEAVE A REPLY