அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிரதான கட்சிகளுக்கு அக்கறையில்லை: கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார பிரிவின் தெற்காசியத் திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் இன்று (திங்கட்கிழமை) கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இதன்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாக இந்த விடயத்தை எடுத்து கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் சட்ட விரோதமானதும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் குறித்து தமது மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அசமந்த போக்குடன் செயற்படுவதாக சுமந்திரன் எடுத்துக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் குறித்த கலவரையறைக்குள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து கருமங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.