அரசின் மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஜே.வி.பியின் தலைவர்!

கறுப்புப் பண வர்த்தகர்களை பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் தேவையாக உள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சாடியுள்ளார்.

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில், சாட்சியம் வழங்கியதன் பின்னர், நிஸ்ஸங்க சேனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளை தோற்கடிப்பதற்காக பணம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

எவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, நிஸ்ஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.