அரசாங்கம் நினைத்தவாறு அரசியலமைப்பைக் கொண்டுவரமுடியாது – மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கம் நினைத்தவாறு புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “புதிய அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள் கூறினாலும், பௌத்தத்துக்கான முன்னுரிமையை இந்த அரசாங்கம் வழங்குகிறதா என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இதில் எமக்கு பிரச்சினை இருக்கிறது. இவ்வாறான நிலையில்தான் தற்பொழுது நாடு பயணித்துக்கொண்டிருக்கிறது.

நாட்டைப் பிளவுப்படுத்தும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்க்குலைக்கும் அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரவே இவர்கள் தற்போது முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனை சுயாதீனமாக அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாது.

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படுமாக இருந்தால் அது அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதைவிடுத்து, பெரும்பான்மையானவர்களின் எதிர்ப்புடன் ஒரு அரசியலமைப்பைக் கொண்டு வர இந்த அரசாங்கத்துக்கு முடியாது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.