அரசாங்கத்தின் 1 இலட்சம் வேலை வாய்ப்பு அரசியல் இலாப நடவடிக்கை – திஸ்ஸ!

தற்போது நாட்டில் பாரிய நிதி பற்றாக்குறை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் இலாபத்தை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன் 1 இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஒரு முயற்சியை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது என கூறினார்.

கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதுபோன்ற முயற்சிகளினால் பொதுமக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் ஒரு பெரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளதாகவும், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் அதிருப்தியை வெளியிட்டுவருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எனவே நாட்டை ஸ்திரப்படுத்த, அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு பதிலாக வெறும் அரசியல் நடவடிக்கைக்காக பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியில் பல்வேறு அறிவிப்புக்களை அரசாங்கம் வெளியிடுகின்றது என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார்.