அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை ’அமைச்சரவை மட்டத்திலேயே நிறுத்துங்கள்’

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தூதுக்குழுவொன்று, அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சி, நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அமைச்சரவை மட்டத்திலேயே இல்லாது செய்யப்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளது.

இந்தக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் (12) மாலை சந்தித்து, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழு இடைக்கால வரைவு அறிக்கை சம்பந்தமான, தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மிதவாத அரசமைப்பு நிபுணர்களிடம், வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை தொடர்பான அறிக்கையொன்றைக் கோரவுள்ளாரெனக் குறிப்பிட்டார்.

சந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி, குறித்த இடைக்கால வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கும், பாதிப்பு ஏற்படுத்துமென, ஜனாதிபதிக்கு விளக்கியதாகக் குறிப்பிட்டார்.

“அறிக்கையை மேற்கோள்காட்டி, ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டினோம். இந்த முன்மொழிவுகள், மக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காக, மிகவும் கவனமான முறையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

“இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் 13ஆவது திருத்தத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, அரசமைப்பைக் காப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்போது, அவற்றையும் நீக்குவதற்குத் திட்டமிடப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அதற்கு ஜனாதிபதி, “ஜனாதிபதி ஜயவர்தனவால் கூடத் தொடப்படாத ஒரு விடயத்தை, நான் எப்படி அனுமதிக்க முடியும்” எனக் கூறினார் என்று, விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

LEAVE A REPLY