அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 8-ம் தேதி விசாரிக்கிறது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது நிலத்தை, மனுதாரர்களான சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா (துறவியர் பேரவை) அமைப்பு, ராம் லல்லா அமைப்பு ஆகியவை, தங்களிடையே மூன்று பகுதிகளாக பிரித்துக்கொள்ளும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இதில் சம்மந்தப்பட்டவர்கள் உடன்படாமல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தனர். அவை 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூ‌ஷண், அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட 3 பேர் அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கிறது.

நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமர்ந்து பேசி, வழக்கின் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தாக்கல் செய்வதையும், அவை பதிவாளர் முன் எண் இடப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.

இன்று விசாரணை தொடங்கிய நிலையில் வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. வக்பு வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டால் நாங்கள் விசாரணையை புறக்கணிப்போம் என்றன. இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி விசாரிப்பதாக கோர்ட்டு கூறியது.

LEAVE A REPLY