அமைச்சு பதவிகளுக்காவே தேசிய அரசாங்கம் – ஜே.வி.பி சாடல்

அமைச்சுப்பதவிகளுக்காகவே தேசிய அரசாங்கம் ஒன்றினை மீண்டும் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள அமைச்சு போராட்டமும், அரசாங்கத்தில் இணைந்துகொள்ள துடிக்கும் நபர்களுக்கு அமைச்சுக்களை வழங்கவுமே கூட்டணி அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசிய கட்சி முயற்சித்து வருகின்றது.

நேர்த்தியில்லாத அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்காது உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்கிறது மக்கள் விடுதலை முன்னணி.

பொதுத் தேர்தலை நடத்தக்கோரிய பிரேரணையை கொண்டுவர நாம் தயாராகவே உள்ளோம். சகல கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.