அமெரிக்க விசேட பிரதிநிதி தென்கொரியாவிற்கு விஜயம்!

வடகொரியாவிற்கான அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி ஸ்டீவ் பெய்கன், இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

தென்கொரியாவின் தலைநகர் சியோலிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி, அணுசக்தி தொடர்பான தென்கொரியாவின் விசேட பிரதிநிதி லீ டோ ஹுனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, கொரிய தீபகற்பத்தில் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.

குறித்த கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தென்கொரியப் பிரதிநிதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஸ்டீவ் பெய்கன் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.

ஸ்டீவ் பெய்கன் தென்கொரியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவவென்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சந்திப்பு தொடர்பில் வடகொரிய அதிபர், அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் இவ்விஜயம் அமைந்துள்ளதோடு, ட்ரம்ப் – கிம் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.