அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய குறுக்கீடு பற்றி விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததா என்பது பற்றி விசாரிக்க சிறப்பு அதிகாரியாக முல்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக ஜனநாயக கட்சியை ேசர்ந்த ஹிலாரிக்கு எதிராகவும், தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப்புக்கு ஆதரவாகவும் ரஷ்ய உளவுப்பிரிவு நடந்து கொண்டதாக பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது. டிரம்ப்பின் பிரசார யுக்திகளில் கூட ரஷ்யா குறுக்கீடு இருந்ததாகவும், அதனால்தான் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணைக்கு அப்போதைய அதிபராக இருந்த ஒபாமா உத்தரவிட்டு இருந்தார்.

அமெரிக்க உளவுப்பிரிவான எப்பிஐ இதுபற்றி விசாரித்து, அவரிடம் அறிக்கை அளித்தது. அப்போது ரஷ்யா தலையீடு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து விளக்கமான விசாரணைக்கு ஒபாமா உத்தரவிட்டார். அந்த சமயத்தில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். இருப்பினும் எப்பிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தி சில முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எப்பிஐ தலைவர் ஜேம்ஸ் கோமேவை கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். ரஷ்யாவின் குறுக்கீட்டை எப்பிஐ கண்டுபிடித்ததால்தான் இந்த நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழ்நிலையில் ரஷ்யா தலையீடு குறித்து விசாரிக்க அமெரிக்க நீதித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சிறப்பு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எப்பிஐ முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் இந்த விசாரணை அமைப்புக்கு தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் ரோத் ரோசென்ஸ்டைன் வெளியிட்டுள்ளார். நேர்மைக்கு பெயர் போன முல்லர் நியமனம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு பணியாதவர் என்று பெயர் எடுத்தவர் முல்லர். எனவே அவரது நியமனத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தன்னை நியமித்தது குறித்து முல்லர் கூறும்போது, தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படுவேன் என்றார். இதற்கிடையே, சிறப்பு விசாரணை அதிகாரியாக முல்லர் நியமிக்கப்பட்டதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

LEAVE A REPLY