அமெரிக்கா: எம்.பி.க்கள் சென்ற ரெயில் மோதி விபத்து – லாரி டிரைவர் பலி

அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கை ஒரு குப்பை லாரி திடீரென கடக்க முயன்றது.

இதைக்கண்ட ரெயில் டிரைவரால் உடனடியாக ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் கிராசிங்கில் சென்ற குப்பை லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரியில் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எம்.பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பிறகு ரெயில் பயணத்தை எம்.பிக்கள் தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக சார்லோட்டஸ்வில்லி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் பயணம் செய்த ரெயில் விபத்தில் சிக்கியது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது

LEAVE A REPLY