அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம் ஈரான் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுவதா?

ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு, ஊழல், பொருளாதார பிரச்சினைகள் தலைதூக்கி வந்த நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். மஷாத் நகரத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாடு முழுவதும் பரவியது. இந்தப் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில் 21 பேர் உயிரிழந்தனர்.

அரசுக்கு எதிரான இந்த போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக புரட்சிகர காவல்படை அறிவித்தது. ஆனாலும் போராட்டங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை.

இந்த நிலையில், ஈரான் போராட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கூட்டியதை ரஷியா வன்மையாக கண்டித்தது.

இதுபற்றி ரஷிய தூதர் வாசிலி நெபன்சியா கூறுகையில், “உள்நாட்டு விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்கா கூட்டி இருப்பது, அந்த கவுன்சிலின் மாண்பை குறைத்து விடும்” என்று சாடினார்.

ஈரான் தூதர் கோலாமாலி கோஷ்ரூ பேசும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்தை அமெரிக்கா தவறாக பயன்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் டெலாட்ரே பேசுகையில், “ஈரான் விவகாரங்களில் தலையிடுவது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஈரான் போராட்டங்கள் கவலை அளித்துள்ளபோதும், அது சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இல்லை” என்று குறிப்பிட்டார்.

ஆனால் ஈரான் போராட்டம் குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவிக்கையில், “அது வீரம் செறிந்த மக்களின் வெளிப்பாடு” என புகழாரம் சூட்டினார்.

தங்கள் நாட்டில் நடந்துவரும் போராட்டத்தின் பின்புலத்தில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் ஏற்கனவே குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY