அமெரிக்காவில் வழக்கு தாக்கல் – கோட்டாவுக்கு எந்த அழைப்பாணையும் கிடைக்கவில்லை என்கின்றார் நாமல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீதான வழக்குத் தாக்கல் தொடர்பாக எந்த அழைப்பாணையும் பிறப்பிக்கப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் அறிந்த வகையில் எந்தவொரு அழைப்பாணையும் இதுவரை கோட்டபாய ராஜபக்ஷ பெற்றுக்கொள்ளவில்லை என கூறிய அவர், ஆதாரமற்ற கூற்றுக்களை சிலர் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதையில் இருந்து உயிர்பிழைத்த தமிழர் ஒருவரின் சார்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு படுகொலைச் செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியதை அடுத்தே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அனலை இந்த வழக்கு தொடர்பாக கோட்டபாய ராஜபக்ஷவிற்கு முறையாக அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.