அமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.

அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.

அதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.

இந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.

“ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே?” என கேள்வி எழுப்பியது.

அதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.

ஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.

அதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.