அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்காவில் அவரது வதிவிடம் அமைந்துள்ள லொஸ் ஏஞ்சல்சில் தங்கியிருந்ததை விட அதிக நாட்களை வொசிங்டனில் தான் செலவிட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பான ஆவணங்களை அவர் ஏற்கனவே கையளித்து விட்டார் என்றும், அதனை உறுதிப்படுத்தும் பதிலுக்காக காத்திருக்கிறார் என்றும், கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, தான் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அத்துடன், இரட்டைக் குடியுரிமை தொடர்பான விடயம் தனது சுதந்திரம் என்றும், அதில் அமெரிக்கா தலையிட முடியாது என்றும் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.