அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதிசெய்ய இந்தியா முடிவு!

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்த நாட்டிலிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவின் பேச்சை கண்டுக்கொள்ளாத இந்தியா தற்போது ஈரானிடம் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில் ஈரான் மீது, அமெரிக்கா விதிக்கவுள்ள தடை இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்பட்டது. ஈரானிடம் இருந்து அதிக அளவில் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்குகின்றது.

ஈரானிடம் இருந்து அடுத்த மாதம் மசகு எண்ணெயயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. யூரோவுக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம், ஈரானிடம் இருந்து அடுத்த மாதம் 1 தசம் இரண்டு, ஐந்து மில்லியன் டொன் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியன் ஒயில் கோப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

மசகு எண்ணெய்க்கு ஈடாக இந்தியா வழக்கமாக வழங்கும் யூரோ பரிவர்த்தனை முடங்கும் நிலையில், அதற்குப் பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்தி ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் இந்திய ரூபாவை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்து உணவு தானியங்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு ஈரான் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அதை மீறினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி நேற்று ரஷ்யாவுடன் இது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.