அமெரிக்காவால் மிரட்ட முடியாது அணு ஏவுகணை பொத்தான் எந்த நேரமும் எனது மேஜையில் உள்ளது

அணு ஏவுகணை பொத்தான் எந்த நேரமும் எனது மேஜையில்தான் உள்ளது என்றும் எனவே அமெரிக்காவால் எங்களை மிரட்ட முடியாது எனவும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் புத்தாண்டு தினத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா கடந்த சில ஆண்டுகளில் அணுகுண்டு–ஹைட்ரஜன் குண்டு சோதனை, அணு ஏவுகணை என 6–க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம் 28–ந்தேதி ஹவாசாங்–15 என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த ஏவுகணைகளால் 4,475 கிலோ மீட்டர் உயரம் வரை செங்குத்தாக பறந்து 13 ஆயிரம் கி.மீ. தூர இலக்கையும் தாக்க இயலும். குறிப்பாக அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் குறி வைத்து இந்த அணு ஏவுகணையை செலுத்த முடியும்.

இதனால் அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்தது. ‘‘நாங்கள் நினைத்தால் வடகொரியாவை நிர்மூலமாக்குவோம்’’ என்றும் வடகொரியாவை எச்சரித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் தலைவர் மைக் முல்லன் கூறுகையில், ‘‘முன்பு இருந்ததைவிட வடகொரியா மீது அணு ஆயுத போர் தொடுக்கும் நிலையை அமெரிக்கா நெருங்கி உள்ளது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் புத்தாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி நேற்று தொலைக்காட்சியில் பேசியபோது பதில் அளித்தார். அப்போது அவர் ஆவேசமாக அமெரிக்காவை எச்சரித்தார்.

அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் வடகொரியாவின் அணு ஆயுதங்களின் வளையத்துக்குள்தான் இருக்கின்றன. இதை அணு ஆயுத மிரட்டல் என்று கருதக்கூடாது. எதார்த்த நிலை என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்களால் எப்போதும் அணு ஆயுத போரைத் தொடங்க முடியாது. ஏனெனில் அணு ஏவுகணை உள்ளிட்ட அனைத்து வித அணு ஆயுதங்களின் பொத்தானும் எந்த நேரமும் எனது மேஜையில்தான் உள்ளது. எங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த வடிவில் அணு ஆயுத மிரட்டல் வந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்’’ என்றார்.
அதேநேரம் கிம் ஜாங் அன்னின் புத்தாண்டு உரையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சத்தையும் காண முடிந்தது. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த அவர் இன்னொரு பக்கம் சமாதான கரத்தையும் நீட்டினார்.

அடுத்த மாதம்(பிப்ரவரி) 6–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தென்கொரியாவின் பியான்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதுபற்றி தனது பேச்சில் கிம் ஜாங் அன் குறிப்பிடுகையில், ‘‘பியான்சாங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால் ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா தனது வீரர், வீராங்கனைகளை அனுப்பி வைக்கும். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார். இதை தென்கொரியா வரவேற்று உள்ளது.

இதற்கிடையே கிம் ஜாங் அன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பது குறித்து புளோ

‘ரிடாவில் தனது மார்–எ–லாகோ சொகுசு விடுதியில் புத்தாண்டு தினத்தை கொண்டாடிய ஜனாதிபதி டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘அதையும்தான் பார்ப்போம்’’ என்று 2 முறை ஆவேசமாக கூறினார்.

LEAVE A REPLY