அப்பாவிகளைக் காட்டிக்கொடுத்த சுமந்திரன் தமிழ் பிரதிநிதி அல்ல

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையில் சுமந்திரனை கொலை செய்வத ற்கு முயற்சித்தவர்கள் அல்ல என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் கையை இழந்தவர்கள். ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தவராவர். 4வது நபரின் பிள்ளைக்கு இயத்தில் ஓட்டை அதற்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. இவ்வாறு 4 அப்பாவிகளை பிடித்து வைத்துக் கொண்டு சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதி என கூற கூடாது.

சுமந்திரனுக்கு மனச்சாட்சி இருந்தால் அந்த 4 பேரையும் விடுதலை செய்யவேண்டும். நான் சத்தியம் பண்ணி சொல்கிறேன். கைது செய்யப்பட்ட 4 பேரும் அப்பாவிகளாவர் அவர்களுக்கு சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில்லை. ஜனாதிபதியே தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார். ஆனால் சுமந்திரன் 4 அப்பாவிகளை வதைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்காக சமாதானம் பேசுவதற்கு செல்கிறார் என்றார்.