அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கையில் உலக வங்கி!

தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டு இன்று வருகை தந்தார்.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு எவ்வாறு வங்கிகளால் ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பாக சிறந்த புரிதலை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்து கருத்து தெரிவித்த அவர், “வறுமையைக் குறைப்பதில் இலங்கை நல்ல முன்னேற்றததைக் கண்டுள்ளது. மனித வளத்தை விருத்திசெய்வதில் இலங்கை தெற்காசியாவிலே உயர்வாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் நடுத்தர வருமானத்தை ஈட்டும் நாடாவதற்கான அதன் பயணத்தை தொடர்வதற்கும் மக்களுக்கான தரமான தொழில்களை உருவாக்குவதற்கும், இலங்கை தொடர்ச்சியாக சிறப்பான நிதிநிலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது.

மேலும் சுற்றுலா, தளவாட சேவை மற்றும் தகவல் தொழில்நுட்ப கேந்திர நிலையமாக அதன் போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன் காலநிலை மாற்ற அபாயங்களை முகாமைத்துவம் செய்யவும் வேண்டும்.

இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒத்துழைக்க உலக வங்கி தொடர்ந்தும் அதன் சிறப்பான பங்களிப்பை வழங்கும்.”என கூறினார்.

இந்த மூன்று நாள் விஜயத்தின் போது ஸ்காபர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, கொழும்பு மேயர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அடங்கலாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.