அன்னிய செலாவணி மோசடி வழக்கு:சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை எப்போது? கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது, சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சசிகலாவிடம் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாகீர் உசேன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது கேட்கப்படும் கேள்விகள் தமிழில் இருக்கவேண்டும் என்றும், அந்த கேள்விகளை ஒரு நாளைக்கு முன்பே தனது வக்கீலிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும், சசிகலா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கேள்விகளை முன்கூட்டியே கொடுக்க அனுமதிக்கக்கூடாது என்று வழக்கு போட்டுள்ள அமலாக்கப்பிரிவு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அன்றைய தினம் சசிகலாவின் மனு மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் எப்போது விசாரணை என்பது பற்றியும் அன்றைய தினம் முடிவாகும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY