அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்

பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

´பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு. அவ்விதமான தீர்வை வழங்க அரசாங்கம் முன் வந்தால் அதற்கு பூரண ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே இலங்கை சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். புலிகளை தோற்கடிக்க அரசாங்கம் பல வாக்குறுதிகளை சர்வதேசத்திற்கு வழங்கியது ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. 13,19 ஆம் திருத்தங்கள் வரும் வரையில் எதையும் கூற முடியாது. தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்க்ககூடிய வகையிலேயே புதிய யாப்பு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. புது பாராளுமன்றம் கூடியே கூட்டமைப்பின் பேச்சாளர் உள்ளிட்ட பதவிநிலைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.´ என்றார்.