அதிமுக இணைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை: ஓபிஎஸ்

அதிமுக அணிகளின் இணைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பேசிய ஓபிஎஸ், ”அதிமுக இணைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”கடந்த 6 மாதத்துக்கு முன்னால் நாங்கள் தொடங்கிய தர்ம யுத்தத்தின் கோரிக்கையில் ஒரு பாதியைத்தான் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பாதி வந்திருக்கிறார்கள், மீதி வரட்டும். எங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதிமுக தொண்டர்களின் விருப்பப்படியே அணிகள் இணையும் முடிவு இருக்கும்” என்று தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நீட் தேர்வில் விலக்கு கோரி, வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையும் இருக்கும் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY