அதிகாரப் பரவலாக்கல் நாட்டை பிளவுப்படுத்த வழிவகை செய்யும்- சரத் வீரசேகர எச்சரிக்கை

அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிளவுப்படுத்த வழிவகை செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சரத்வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “அதிகாரப்பரவலாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்திடம் மட்டும்தான் இருக்க வேண்டும்.

இது பகிரப்படுவதானால், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதான் நாட்டை பிளவு படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

ஆனால், அனைவருக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் நோக்கமாகும். தற்போது மாகாணசபை முறைமை தொடர்பாக ஆராயவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

மாகாண சபை முறைமை இல்லாமல் தற்போது இரண்டு வருடங்களை நாம் கடந்து விட்டோம். இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக- பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயவேண்டும்.

இதனால், நாடு பின்நோக்கி நகர்ந்துள்ளதா, அல்லது நன்மை ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயவேண்டும். நிதி விவகாரம் குறித்து பார்க்க வேண்டும்.

வளர்ந்துவரும் ஒரு நாட்டில் நிதியை அநாவசியமாக பயன்படுத்தக்கூடாது. இதனால்தான் மாகாணசபை முறைமை குறித்து ஆராயவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.