அதிகாரப் பரவலாக்கலை அறியாதவர்களே அரசியலமைப்பை எதிர்க்கின்றனர்- ராஜித சாடல்

அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “புதிய அரசமைப்பு வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் ஊடாக, அரசியலமைப்பு வரைபைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நாம் வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதனையடுத்து, இதுதொடர்பில் விவாதங்களை நடத்தி, கட்சி மற்றும் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளையும் உள்வாங்கத் தீர்மானித்துள்ளோம். இந்த யோசனைகளைப் பெற்ற பின்னரே, இந்த வரைபை நாம் இறுதி செய்வோம்.

இந்தநிலையில், எதிரணியினர் தேவையில்லாமல் இந்த விவகாரம் தொடர்பில் பொய்யானக் குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு எப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும். இந்த அதிகார ஆசை 50 களிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இதன் விளைவாகத்தான் நாட்டில் யுத்தம் கூட இடம்பெற்றது. ஒருமித்த நாட்டில் அதிகாரத்தை பகிர்வதானது எவ்வாறு சமஷ்டியாகும் என்பதுதான் எமது கேள்வியாக இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் பலருக்கு, சமஷ்டியென்றாலோ, ஒருமித்த நாடு என்றாலோ, அதிகாரப் பரவலாக்கல் என்றாலோ என்னவென்றேத் தெரியாது.

இப்போது தேர்தல் வேண்டும் என்கிறார்கள். ஆனால், யாரும் நினைப்பதுபோல தேர்தல் ஒன்றை நாட்டில் நடத்திவிட முடியாது.

உரிய காலத்துக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதாயின், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.

ஜனாதிபதிக்குக்கூட இந்த அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தான் முதலாவதாக இடம்பெறவுள்ளது. இதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.