அதிகாரத்தைக் கைப்பற்ற மஹிந்த அணியினர் இரகசியத் திட்டம் – சஜித்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் அரசியல் சூழ்ச்சியினூடாக அதிகாரத்தைக் கைப்பற்ற, இரகசியத் திட்டம் வகுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், சர்வாதிகாரப் போக்குடைய ராஜபக்ஷ அணியினர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற, தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) ஊடகமொன்றிக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அதிகார வெறி, பதவி ஆசை பிடித்தவர்கள் ஜனநாயகத் தீர்ப்புக்கு முரணாக, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சி, தடைகளைத் தகர்த்தெறிந்து தொடரும் என்றும், எமது ஆட்சியை எவரும் இனிமேல் கவிழ்க்க முடியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

அத்தோடு நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ எதுவாகவிருந்தாலும், அரசமைப்பு விதிமுறைகளுக்கமைய எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாகவும், அனைத்துத் தேர்தல்களிலும் தாமே வெற்றிவாகை சூடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி போன்று மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி அரங்கேறினால் நாட்டு மக்களே அணிதிரண்டு முறியடிப்பார்கள்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.