அடுத்த 25 வருடங்களுக்கு ஐ.தே.க.வினால் ஆட்சியமைக்க முடியாது – அமைச்சர் நிமல்

அடுத்த 25 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் ஆட்சிக்கு வர முடியாத நிலை காணப்படுவதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊவா பரணகம பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையே காரணம் எனக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின்போது பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவந்தன. என்றாலும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக மக்கள் செயற்பட்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

வடக்கு கிழக்கில் எங்களுக்கு வாக்குகள் இல்லாமல்போகும்போது தெற்கு மக்கள் நாட்டுக்காக கட்சி பேதமின்றி சிறந்த தீர்மானம் ஒன்றை எடுத்தனர். நாடுசென்றுகொண்டிருந்த போக்கை மாற்றியமைக்கவேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்தது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பட்ட தவறுகளை இன்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானங்களை அவர்கள் அன்று எடுக்கவில்லை. மக்கள் விரக்தியடைக்கூடிய தவறான தீர்மானங்களையே எடுத்தார்கள் என்பதை தற்போது அவர்கள் உணர்கின்றனர்.

நாட்டு வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தார்கள். அதனால் மக்களின் எதிர்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. மேலும் பாரிய கடன் சுமையுடனே அரசாங்கத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம்.

என்றாலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.