அடுத்த சஹரான்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அடுத்த சஹரான்களை உருவாக்கும் பணியை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிங்குரங்கொட பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பயங்கரவாதிகளின் வெற்றியல்ல. நாட்டின் ஆட்சியாளர்களின் தோல்வியே தாக்குதல் வெற்றியடைய காரணம்.

நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்பற்றதாக மாற்றி. வாக்கு பலத்தை அதிகரிப்பதற்காக அடிப்படைவாதிகளை ஊக்குவித்தமை தற்போது உறுதியாகியுள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பயங்கரவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்பது அண்மைக்கால சம்பவங்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் இனவாதத்தை தூண்டிவிட்டு ஜுலை கலவரத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் அது இரண்டு, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்தன.

ஆனால், ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் மினுவங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் இருப்பவர் யார்?

சஹரான்கள் தாக்குதல் நடத்திவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், அடுத்த சஹரான்களை உருவாக்கும் பணியை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.