அடுத்த ஆண்டு ஜூன் வரை அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

“2015 ஜூன் 21ஆம் நாள் சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளில் முடிவடைகிறது.

எனவே, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் நாளே நடைமுறைக்கு வந்த அன்றில் இருந்தே, சிறிலங்கா அதிபரின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும்.

இதன்படி, அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2020 ஜனவரி 08ஆம் நாள் வரை பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 2020 ஜூன் 20 வரை பதவியில் இருக்க முடியும்.

மிகவும் உணர்வுபூர்வமான இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏன் உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரக் கூடாது? இதுபற்றி நாங்கள் எமது சட்டவல்லுனர்களுடன் ஆராய்ந்து வருகிறோம்.

2015 ஜூன் 20 வரை சிறிலங்கா அதிபரின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரையறுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளில் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு அந்தக் காலப்பகுதியில் கிடைக்கும்.

எனவே, 2020 பெப்ரவரியில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.