அடியோடு நிராகரித்து நிபந்தனை விதித்தார் சம்பந்தன்!

திருகோணமலை மாவட்டத்தில் தான் போட்டியிடுவதெனில் ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே போட்டியிடுவேன் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிபந்தனை விதித்திருப்பதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், கொழும்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சம்பந்தன் இந்த நிபந்தனையை விதித்ததாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லையென்றும், ஆனால் கட்சித் தலைவர் மற்றும் பிரதேச மக்கள் வலியுறுத்துவதால் போட்டியிடுகிறேன் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னுடன் குகதாசன் போட்டியிடுவார் என்றும், அவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதற்கு அனைவரும் சம்மதித்தால், தான் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்றும் சம்பந்தன் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்நிலையில், அவரின் இந்தக் கூற்றினை யாரும் மறுக்கவில்லை என தெரியவருகிறது. ஆனால் சில மாற்று யோசனைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேசியப்பட்டியல் விவரத்தில் கே.வி.தவராசாவை முதலாவதாகவும், குகதாசனை இரண்டாவதாகவும் பரிந்துரைத்து, அதன் அடிப்படையில் நியமனம் வழங்கலாமென பலரும் யோசனை தெரிவித்தபோதும், அதை இரா.சம்பந்தன் திட்டவட்டமாக நிராகரித்ததாக சம்பந்தனை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளது.