அச்சுறுத்தி வடமாகாணசபையினை முடக்க தமிழரசு முயற்சி?

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையினை தனித்து வைக்க அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேற்கொண்ட முயற்சி தொடர்ந்தும் தோல்வியடைந்துவருகின்ற நிலையில் தற்போது அதிகாரிகள் பக்கம் அவர் தன் பார்வையினை திருப்பியிருக்கின்றார்.

அமைச்சவை தொடர்பிலான சர்ச்சை முற்றுப்பெறாமல் தொடர்ந்தும் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் விடயத்தில் அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல்; எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை அதிகாரிகள் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கை விடுத்துள்ளமாகாணஅவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த விடயத்தில் அதிகாரிகள் இழைக்கின்ற தவறுகளை எந்தவிதத்திலும் சபை பொறுப்பெடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபையின் 132 ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாணபேரவைச் செயலக சபாமண்டபத்தில் சபைத் தலைவர்.சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள் யார் யார் என்ற சர்ச்சை நேற்றும் ஏற்பட்டு கடும் வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்றன. இதன் போது கருத்து வெளியிட்ட அவர் மாகாணசபைச் சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் சபையொன்று மாகாணசபைக்கு இருக்க வேண்டியது அவசியம். அந்த சபையானது முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் இணைந்ததாகவே இருத்தல் வேண்டும்.இங்கு ஏற்கனவே முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னராக மேலும் ஒரு அமைச்சராக பா.டெனீஸ்வரனும் இருக்கின்றார். ஆனாலும் சட்டஏற்பாடுகளுக்கமைய அவ்வாறு ஆறு பேர் இருக்கமுடியாது. ஆகையினால் இந்தச் சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை தற்போது இல்லை. இத்தகைய அமைச்சர் சபையை இந்தச் சபையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் இருக்கின்ற அமைச்சர்கள் விவகாரம் தற்போது நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. அத்தோடு இந்தவிடயத்தில் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. ஆகவே அந்த தீர்ப்பையும் மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே அத்தகைய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருக்கின்ற போது அத் தீர்ப்பு குறித்து சபையோ,அதிகாரிகளோ,அமைச்சின் செயலாளர்களோ தங்களுக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனச்சொல்லமுடியாதெனவும் சிவஞானம் மிரட்டல் விடுத்துள்ளார்.

வடமாகாண அமைச்சரைவை முடக்கியதன் மூலம் நிர்வாக செயற்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்து முதலமைச்சர் தரப்பிற்கு எதிராக மக்கள் திரண்டெழ வைக்க நகர்வுகள் முன்னெடுக்கப்படடிருந்தது.

ஆனாலும் எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக வடமாகாண நிர்வாகம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டே செல்கின்றது.

இதன் தொடர்ச்சியாக உதயன் நாளிதழ் வடமாகாண பிரதம செயலாளரை இலக்கு வைத்து அச்சுறுத்தி முடங்க வைக்க செய்திகளை பிரசுரித்தது.இதுவும் கண்டுகொள்ளப்படாத நிலையில் தற்போது அவைத்தலைவர் அதிகாரிகளை மிரட்டி நிர்வாக செயற்பாட்டை முடக்க களமிறங்கியிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கதைகள் பேசுபொருளாகியிருக்கின்றது.