அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா. உதவ வேண்டும் -வடக்கு ஆளுநர்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவர ஐ.நா. உதவிபுரியவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் (Joern Soerensen) கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (வியாழக்கிழமை) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இதன்போதே ஆளுநர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு விபரிக்கப்பட்டது.

போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு இலங்கைக்கான பணிப்பாளர் ஆளுநரிடம் தெரிவித்தார்.

இதேவேளை, வட. மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீர்ப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்ட ஆளுநர், அதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்தார்